ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
UPDATED : டிச 26, 2025 11:10 AM
ADDED : டிச 26, 2025 11:10 AM
சென்னை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 29ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில், சங்க நிர்வாகிகளுடன், நேற்று முன்தினம் பேச்சு நடந்தது. அதில், ஊழியர்களின் கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சங்க பொதுச்செயலர் சங்கர சபாபதி கூறியதாவது:
அமைச்சர் எங்களை அழைத்து பேசினார். அப்போது, 2,000த்திற்கும் அதிகமான, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார்.
அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். ஒரு மாதத்திற்குள், அமைச்சர் நடவடிக்கை எடுக்கா விட்டால், போராட்டத்தை துவக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

