கெஜ்ரிவாலை விட சிறந்தவர் ஆதிஷி; பல்கலை விழாவில் கவர்னர் சக்சேனா புகழாரம்
கெஜ்ரிவாலை விட சிறந்தவர் ஆதிஷி; பல்கலை விழாவில் கவர்னர் சக்சேனா புகழாரம்
UPDATED : நவ 23, 2024 12:00 AM
ADDED : நவ 23, 2024 07:39 PM
புதுடில்லி:
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட, தற்போதைய முதல்வர் ஆதிஷி சிங் ஆயிரம் மடங்கு சிறந்தவர் என, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா பேசினார்.
டில்லி இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலையின் 7வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று மாணவியருக்கு பட்டம் வழங்கிய துணைநிலை கவர்னர் சக்சேனா பேசியதாவது:
டில்லியின் முதல்வர் ஒரு பெண் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல்வர் ஆதிஷி சிங், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட, ஆயிரம் மடங்கு சிறந்தவர் என என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
பட்டப்படிப்பை முடித்துள்ள உங்களுக்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில் உங்களைப் பற்றிய உங்கள் பொறுப்பு, இரண்டாவது உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான உங்கள் பொறுப்பு, மூன்றாவது பொறுப்பு சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் உங்கள் அக்கறை. ஆண் - பெண் என்ற பாகுபாட்டை உடைத்து, அனைத்துத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நிரூபிப்பது நான்காவது பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பொதுப்பணி, கல்வி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்த ஆதிஷி சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். அப்போது, வரும் சட்டசபைத் தேர்தலில் மக்களிடம் நேர்மைக்கான சான்றிதழை பெற்ற பிறகே முதல்வர் பதவியை ஏற்பேன் என அரவிந்த் கெஜ்ரிவால் சபதம் செய்தார்.
மாணவர்கள் கைது
அம்பேத்கர் பல்கலையில் இரண்டு ஆசிரியர்கள் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்காக, முதல்வர் ஆதிஷியைக் கண்டித்து, இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலை அருகே நேற்று போராட்டம் நடத்திய 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.