உறைவிட பள்ளி மாணவர் சேர்க்கை; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
உறைவிட பள்ளி மாணவர் சேர்க்கை; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
UPDATED : ஆக 20, 2024 12:00 AM
ADDED : ஆக 20, 2024 10:41 AM
மதுரை:
உண்டு உறைவிட பள்ளிகளில் பட்டியலின சமூக மாணவர்கள் சேர்க்கை திட்டம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் அறிவிப்பு செய்ய தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
உண்டு உறைவிட பள்ளிகளில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 9வது வகுப்பு, பிளஸ் 1 ல் சேர்வதற்கான திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயல்படுத்துகிறது. உதவித் தொகையுடன் தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கம். இதற்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்குரிய அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகிறது. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது பற்றிய விழிப்புணர்வு பட்டியலினத்தை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள், பெற்றோர்களிடம் இல்லை. அறிவிப்பை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடுவதில்லை. திட்டம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஊடகங்களில் அறிவிப்பு செய்ய வேண்டும். தேர்விற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயலர், தேசிய தேர்வு முகமை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,9 க்கு ஒத்திவைத்தது.