ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 26 முதல் மாணவர் சேர்க்கை
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 26 முதல் மாணவர் சேர்க்கை
UPDATED : மே 24, 2025 12:00 AM
ADDED : மே 24, 2025 10:11 AM
கெங்கவல்லி:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நாளை மறுநாள் முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விசாலாட்சி அறிக்கை:
அரசு, அதன் நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி பெற, தொடக்க கல்வி பட்டயப்படிப்பில் (டிப்ளமோ இன் எலிமென்டரி எஜூகேசன்) தேர்ச்சி தகுதியாக உள்ளது. இப்படிப்பு, கெங்கவல்லியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கப்படுகிறது.
கல்வி கட்டணம் செலுத்தி, டிஎல்எட் படிக்க ஆர்வம் உள்ளவர்கள், https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வரும் 26 முதல் ஜூன், 6 வரை கல்வி தகுதி உள்ளிட்ட உரிய சான்றுகளை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாய், மற்ற பிரிவினர், 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர், 30 வயதுக்கு மிகாதவராகவும், பிளஸ் 2வில் பொதுப்பிரிவினர் என்றால், 50 சதவீதம், மற்ற பிரிவினர் என்றால், 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், கலப்பு திருமணம் செய்தவர்கள், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது. நேரடி மாணவர் சேர்க்கை ஜூன், 7 முதல் நடக்க உள்ளது. விபரம் பெற, 9944866733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.