தோல்வியால் துவண்டுவிடக்கூடாது பட்டமளிப்பு விழாவில் அறிவுரை
தோல்வியால் துவண்டுவிடக்கூடாது பட்டமளிப்பு விழாவில் அறிவுரை
UPDATED : மார் 25, 2025 12:00 AM
ADDED : மார் 25, 2025 09:01 AM
வால்பாறை:
தோல்வியை கண்டு மாணவர்கள் துவண்டு விடக்கூடாது என கல்லுாரி கல்வி இயக்கக இணை இயக்குனர் ராமன் பேசினார்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.
விழாவில், சென்னை கல்லுாரி கல்வி இயக்ககம் இணை இயக்குனர் ராமன், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டுமெனில், நேற்று நடந்த சம்பவங்களை மறக்க வேண்டும். பழைய சம்பவங்களை மனதில் நிறுத்திக்கொள்ளாமல், முன்னேறிச்சென்றதால் தான், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடிந்தது.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில், கடைசி மூச்சு உள்ள வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மனநிறைவாக வாழ்பவன் தான் பெரிய மனிதன். வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தோல்வியை கண்டு ஒரு போதும் துவண்டு விடக்கூடாது. குறிப்பாக, தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. வாழ்க்கையில் வெற்றி என்பது போராடி தான் பெறமுடியும்.
இந்த உலகில் யாருக்கு யார் பெரியவனும் இல்லை; தாழ்ந்தவனும் இல்லை. அகம்பாவம் வாழ்க்கையை அழித்துவிடும். போராட்டமான வாழ்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அரசு கல்லுாரியில் 2022- 23ம் கல்வியாண்டில் படித்த, 220 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.