அரசு பள்ளிகளில் பூமி தினம் கடைபிடிப்பு மரக்கன்றுகள் நட்டு மாணவர்களுக்கு அறிவுரை
அரசு பள்ளிகளில் பூமி தினம் கடைபிடிப்பு மரக்கன்றுகள் நட்டு மாணவர்களுக்கு அறிவுரை
UPDATED : ஏப் 24, 2024 12:00 AM
ADDED : ஏப் 24, 2024 10:18 AM

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பூமி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டும், மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பூமி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 22ல், உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இதன் கருப்பொருள், எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள் என்பதே ஆகும். பூமியில் நாம் முதலீடு செய்தால், அதன் பலன், பன்மடங்கு பெருக்கம் அடையும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும், புவியை நாம் காப்பதன் அவசியமும், இந்நாளில் செயல்படுத்த வேண்டிய மிக முக்கிய நிகழ்வாகும்.
எனவே, மாணவர்கள் புவி தினத்தை மரக்கன்றுகளை நட்டு கொண்டாட வேண்டும். அதை வலியுறுத்தி, நம் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாத்து குறித்த விழிப்புணர்வும், செயல்பாடுகளும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும், மாணவியருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந் தது. தலைமையாசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை. அனைவரும், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். பூமியில் அதிகமாக மரங்களை முதலீடு செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என, உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.