யு.ஜி.சி. விதிகளை வாபஸ் பெற கோரி போராட்டம்; தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
யு.ஜி.சி. விதிகளை வாபஸ் பெற கோரி போராட்டம்; தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 03:14 PM
சென்னை:
யு.ஜி.சி., வரைவு விதிகளை திரும்ப பெற கோரி டில்லியில் தி.மு.க., எம்.பி.,க்கள் பிப்.6ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் தி.மு.க.,வின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட், பார்லி.யில் கூட்டத் தொடரின் போது எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சுருக்க விவரம் வருமாறு:
கவர்னருக்கான நடத்தை விதிகள் உருவாக்க வேண்டும், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய பார்லி. கூட்டத்தொடரில் வலியுறுத்துதல்.
அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செயல்பட்டு டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதல்வர், துணை நின்ற மக்களுக்கும் நன்றி.
உருக்கு இரும்பு 5370 ஆண்டுகள் முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகி உள்ளது என்பதை உலகிற்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என்று கூட்டம் வலியுறுத்துகிறது.
கூட்டாட்சி தத்துவம், மாநில கல்வி உரிமை, உயர்கல்வி அனைத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக்கோரி மாணவர் அணி சார்பில் பிப்.6ல் டில்லியில் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த கூட்டம் தீர்மானிக்கிறது.
சிறுபான்மையினர் நலனை பாதிக்கும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, சட்டத்திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரும் போது தி.மு.க., சார்பில் தீவிரமாக எதிர்த்து வாக்களிப்பது என தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்தய அரசு, இம்முறை தமிழக திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்துக்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.