UPDATED : ஆக 05, 2025 12:00 AM
ADDED : ஆக 05, 2025 09:38 AM

சென்னை:
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவை நோக்கி இந்திய ராணுவம் எடுத்துள்ள புதிய முயற்சி அக்னிஷோத் என்ற ஆராய்ச்சி பிரிவு சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் சென்னை பயணமாக வந்துள்ள ஜெனரல் திவிவேதி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆபரேஷன் சிந்தூர் - பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியப் போரின் புதிய அத்தியாயம் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இதில் அவர், ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நுண்ணறிவுடன் மேற்கொண்ட மறுமொழி நடவடிக்கை ஆகும் எனக் கூறினார்.
மேலும், 5-ம் தலைமுறை போர்கள், மறைமுக மோதல்கள், உளவியல் தாக்குதல் போன்ற புதிய போர் வடிவங்களுக்குத் தயாராக இந்திய ஆயுதப்படை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் பரந்த அளவிலான மாற்றத்திற்கான ஒரு கட்டமாக இந்த அக்னிஷோத் திட்டம் செயல்படுவதாகவும், சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி பிரிவு பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐஐடி டில்லி, ஐஐடி கான்பூர், பெங்களூரு ஐஐஎஸ்சி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் ராணுவ பிரிவுகள் முன்னெடுத்த திட்டங்களை அவர் பாராட்டினார். கல்வி, கண்டுபிடிப்பு, புதுமைகள் ஆகியவை மூலம் ராணுவ வளர்ச்சிக்கு ஆய்வகம் வழிகாட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.