மரவள்ளிக்கிழங்கு வயலில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஆய்வு
மரவள்ளிக்கிழங்கு வயலில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஆய்வு
UPDATED : ஜன 15, 2026 04:14 PM
ADDED : ஜன 15, 2026 04:16 PM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், செம்பாம்பாளையம் கிராமத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று, நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள் வயலில் பார்வையிட்டு பயிர் வளர்ச்சி, அறுவடை முறை மற்றும் செயல்திறன் குறித்து நேரடி ஆய்வு செய்தனர். கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் நட்ட மரவள்ளி செடிகள், இந்தாண்டு நல்ல மழைப்பொழிவு கிடைத்ததன் காரணமாக, உயர்ந்த விளைச்சலை வழங்கியுள்ளன. ஒரு ஏக்கருக்கு, 25 - 30 டன் வரை விளைச்சல் கிடைக்கலாம் எனவும், சந்தை விலை நிலைத்திருப்பதால் விவசாயிகளின் வருமானம் நன்றாக இருக்கும் என, எதிர்பார்க்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
கிழங்கின் நிலத்தடி வளர்ச்சி, செடி கிராம மேலாண்மை பூச்சி நோய் கட்டுப்பாடு உர மேலாண்மை போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதே போல் அறுவடை செய்யப்படும் கிழங்குகளை போட்டு கணக்கிடும் முறையையும் மாணவர்கள் நேரில் கண்டு பயிற்சி பெற்றனர். இந்த ஆண்டு மரவள்ளி கிழங்கு பயிர் தரம் சிறப்பாக இருந்ததையும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் தேவையில் கூடுதல் வாய்ப்பு உள்ளதையும் விவசாயிகள் தெரிவித்தனர். மாணவர்களின் வருகை விவசாயிகளுக்கு ஊக்கம் தருவதாக குறிப்பிட்டனர்.

