ஆந்திராவில் ரூ.1000 கோடியில் ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம்
ஆந்திராவில் ரூ.1000 கோடியில் ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம்
UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM
ADDED : ஜூலை 15, 2025 04:03 PM

அமராவதி:
ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.1000 கோடியில், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் எனப்படும் பிட்ஸ் பிலானி, ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான பிட்ஸ் பிலானியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் பிட்ஸ் பிலானியின் தலைவரும் வேந்தருமான குமார் மங்கலம் பிர்லா கூறியதாவது:
ஆந்திர தலைநகரான அமராவதியில், ஆண்டுக்கு 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ1,000 கோடி முதலீடு செய்து, ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆந்திரப் பிரதேச அரசு, ஏ.பி.சி.ஆர்.டி.ஏ., மூலம் ஏற்கனவே இதற்கு நிலம் ஒதுக்கியுள்ளது.
அதிநவீன கல்விக்கான அதன் தடத்தையும் உறுதிப்பாட்டையும் கணிசமாக விரிவுபடுத்தும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக இங்கு முதலீடு செய்கிறோம். இந்த வளாகத்தின் கவனம் நமது எதிர்காலத்தை வரையறுக்கும் தொழில்நுட்பங்களில் தலைமைத்துவத்திற்கு இந்திய மாணவர்களை தயார்படுத்துவதாகும். இது, டேட்டா சயின்ஸ், ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு மொழியியல் மற்றும் சைபர்-பிசிகல் அமைப்புகளில் நிபுணத்துவம் பெறும்.
இந்தப் புதிய வளாகத்தின் மேம்பாடு இரண்டு கட்டங்களாக நிறைவடையும். முதல் கட்டம் 3,000 மாணவர்களுக்கு உதவும். இரண்டாம் கட்டம் திறனை 7,000க்கும் அதிகமாக உயர்த்தும். மேம்பட்ட ஆராய்ச்சி மையங்கள், தொழில் முனைவோர் மையங்கள் ஆகியவையும் இருக்கும்.
அமராவதி வளாகம், நிலையான உள்கட்டமைப்புடன் ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மையமாகவும் செயல்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

