டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க வருகிறது ஏ.ஐ., தொழில்நுட்பம்
டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க வருகிறது ஏ.ஐ., தொழில்நுட்பம்
UPDATED : ஏப் 20, 2026 11:10 PM
ADDED : ஏப் 20, 2026 11:11 PM

புதுடில்லி:
'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் ஆன்லைனில் நடக்கும் பண மோசடிகளை தடுக்க, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும், 'அபய்' என்ற, 'சாட்பாட்'டை சி.பி.ஐ., அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம், தங்களுக்கு வரும் சி.பி.ஐ., நோட்டீஸ் உண்மையானதா என்பதை மக்கள் சரிபார்க்க முடியும்.
போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் மக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. நாடு முழுதும், டிஜிட்டல் கைது தொடர்பான புகார்களை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க, ஏ.ஐ., மூலம் இயங்கும், 'அபய்' என்ற, 'சாட்பாட்'டை சி.பி.ஐ., அறிமுகப்படுத்துகிறது.
எப்படி செயல்படும்?
சி.பி.ஐ., பெயரில் வரும் நோட்டீஸ்கள் உண்மையானவையா என்பதை, இந்த, 'அபய்' சாட்பாட் மூலம் சரிபார்க்கலாம். இந்த சாட்பாட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி, உண்மையானதா அல்லது போலியானதா எனக் கேட்டால், உடனடியாக பதில் சொல்லிவிடும். டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வரும் சூழலில், மக்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு கருவியாக அமையும்.
