ஏ.ஐ., தொழில்நுட்பம்; ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு
ஏ.ஐ., தொழில்நுட்பம்; ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு
UPDATED : டிச 02, 2024 12:00 AM
ADDED : டிச 02, 2024 09:00 AM

திருப்பூர் :
எத்தகைய தொழிலாக இருந்தாலும், தொடர் தகவல் அமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெறுவது எளிதாகும். வளர்ச்சியும் உறுதி செய்யப்படும். அவ்வகையில், இண்டஸ்ட்ரி -4.0 என்ற பெயரில், ஏ.ஐ., தொழில்நுட்பம் எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து தொழில்களிலும் பேசுபொருளாக இருக்கிறது.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை, அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன் ஆகியோர், ஜப்பானில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஓசாகாவில் நடக்கும் ஜியாம் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, ஜப்பானிய தொழில்நுட்பங்களை பார்வையிட்டனர். யமடோ, கன்சாய் ஸ்பெஷல், ஜூகி போன்ற நிறுவனங்களின் சமீபத்திய பல இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
குறிப்பாக, ஏ.ஐ., தொழில்நுட்பம் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள், உதிரி பாகங்களின் பயன்பாடுகளை நேரில் கண்டறிந்தனர். இந்தியா மட்டுமல்லாது, வியட்நாம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில்துறையினர் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
புதிய தொழில்நுட்ப பகிர்வால் திருப்பூர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், திருப்பூரில் இருந்து 50 பேர் கொண்ட குழுவினர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், ஜப்பான் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பத்தை திருப்பூரில் காட்டுப்படுத்த முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.