தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை கொல்லக்கூடும்: வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்கள் திட்டம்

ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை கொல்லக்கூடும்: வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்கள் திட்டம்

ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை கொல்லக்கூடும்: வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்கள் திட்டம்


UPDATED : செப் 14, 2026 11:39 AM

ADDED : செப் 14, 2026 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 11:39 AM ADDED : செப் 14, 2026 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்துக்கே பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அந்தத் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இது குறித்த கேள்விக்கு முன்னணி ஏ.ஐ., நிறுவனமான, 'ஆந்த்ரோபிக்' தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் அளித்த பதிலில், “சரியான பாதையில் சென்றால் ஆபத்து குறைவு; தவறான பாதையில் சென்றால் ஆபத்து அதிகம்,” என்றார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த, 'ஆந்த்ரோபிக்' நிறுவனம், 'கிளாட் ஏ.ஐ.,' செயலி மற்றும் ஏ.ஐ., ஆராய்ச்சியில் உள்ள முன்னணி நிறுவனம். இதில் பணியாற்றி விலகிய ஜேக்கப் காக்சன் என்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'ஏ.ஐ., தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள், 2030க்குள் ஏ.ஐ., மனிதர்களை அழித்து விடும் என்பதை உண்மையாகவே நம்புகின்றனர்' என எச்சரித்திருந்தார்.

இது குறித்து, 'ஆந்த்ரோபிக்' தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:

ஜேக்கப் காக்சன் கூறிய கருத்துடன் நான் அதிகமாக உடன்படுகிறேன். அவர் ஆந்த்ரோபிக்கை விட்டு வெளியேறிய போது, 'ஆந்த்ரோபிக் தான் மிகவும் பொறுப்புடன் செயல்படும் நிறுவனம்; இந்த பிரச்னைகளை மிகவும் நன்றாக உணர்ந்துள்ள நிறுவனமும் அது தான்' என்றார். அவர் எங்களை குறை கூறவில்லை. ஒட்டுமொத்த ஏ.ஐ., துறையும் மிக வேகமாக முன்னேறுவதை பற்றித் தான் அவர் கவலை தெரிவித்தார்.

ஏ.ஐ., மனிதர்களை அழிக்கும் என்பதற்கு எத்தனை சதவீதம் சாத்தியம் என்று கேட்டால், அதற்கு பதிலில்லை. அதன் பாதைகள் எங்கு செல்கின்றன என்பதை பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நாம் சரியான பாதையில் சென்றால், தவறு நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தவறான பாதையில் சென்றால், அந்த வாய்ப்பு மிக அதிகமாக இருக்கலாம்.

எனவே, சரியான பாதையை தேர்வு செய்யும் நம் திறனில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏ.ஐ., துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். நாம் மிகவும் மெதுவாக இத்துறையில் முன்னேறினாலும், தவறான நபர்களின் கைகளில் இந்த தொழில்நுட்பம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது விபரீதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேகத்தை கட்டுப்படுத்த அறிவுரை!


டாரியோ அமோடெய் கூறியுள்ள கருத்துகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனர் சாம் ஆல்ட்மேன், 'எக்ஸ் ஏ.ஐ.,' நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட பதிவில், 'முன்னணி ஏ.ஐ., வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் டாரியோவுடன் நான் உடன்படுகிறேன். இது தொடர்பாக சில வாரங்களாக ஓபன் ஏ.ஐ.,யில் முக்கியமான ஆலோசனைகள் நடக்கின்றன. நிறுவனத்துடன் தொடர்பில்லாத சுதந்திரமான மதிப்பீட்டாளர்களை நியமிப்பது சிறந்த யோசனை' என, குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கும், 'டாரியோ சொல்வது சரி' என தெரிவித்துள்ளார்.

முக்கிய பரிந்துரை!


ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அணுகுமுறையாக மூன்று அம்சங்களை, ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் பரிந்துரைத்துள்ளார்.

ஒன்று, ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கு முன் பாதுகாப்பை உறுதி செய்தல்.

இரண்டு, ஏ.ஐ., அமைப்புகளை மதிப்பீட்டாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்வது.

மூன்றாவது, உலக நாடுகள் இணைந்து பொதுவான விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us