அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 14ல் ஆன்லைனில் துவக்கம்
அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 14ல் ஆன்லைனில் துவக்கம்
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:33 PM
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங், ஆகஸ்ட், 14ல் துவங்குகிறது.
நாடு முழுதும், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலையில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மத்திய குழு நடத்துகிறது.
நடப்பு 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறையில், https://mcc.nic.in என்ற இணையதளத்தில், ஆக., 14ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கவுன்சிலிங் குழு வெளியிட்ட அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், mcc.nic.in என்ற இணையளத்தில், ஆக., 14ல் துவங்க உள்ளது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், ஆக., 14 முதல் 20ம் தேதி பகல் 12:00 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அன்றைய தினம், 3:00 மணி வரை கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.
மேலும், 16ல் இருந்து 20ம் தேதி நள்ளிரவு 11:55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம். 21, 22ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில், கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 23ம் தேதி இட ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்படும்.
பின், 24 முதல் 29ம் தேதிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லுாரிகளில் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 30, 31ம் தேதிகளில் நடக்கும். இரண்டாம் சுற்று கவுன்சிலிங் செப்., 5ம் தேதியும், மூன்றாம் சுற்று கவுன்சிலிங் செப்., 26ம் தேதியும், இறுதிச் சுற்று கவுன்சிலிங் அக்., 16ம் தேதியும் துவங்கும்
புனே ராணுவக் கல்லுாரியில் உள்ள பி.எஸ்சி., படிப்புக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதற்கான சேர்க்கையும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான சேர்கையின்போதே நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பப் பதிவு துவங்கி உள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின், tnmedicalselection.net என்ற இணையதளத்தில், ஆக., 8 வரை விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.