கற்பித்தலில் சிறந்து விளங்கும் பள்ளி விருது பெற்று அசத்தல்
கற்பித்தலில் சிறந்து விளங்கும் பள்ளி விருது பெற்று அசத்தல்
UPDATED : நவ 29, 2024 12:00 AM
ADDED : நவ 29, 2024 08:14 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், செம்பாகவுண்டர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 2023-24ம் கல்வியாண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளியாக தேர்வாகி விருது பெறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, கற்றல் திறன் மேம்பாடு, கற்பித்தலில் புதுமை, அடிப்படை வசதிகள் என அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் செயல்படும் சிறந்த பள்ளிகளுக்கு, அரசு விருது வழங்கி வருகிறது.
அவ்வகையில், 2023-24ம் கல்வியாண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளிகளில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், செம்பாகவுண்டர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேர்வானது. சென்னையில் நடந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் விருது வழங்க, பள்ளித் தலைமையாசிரியர் பெரியநாயகி பெற்றுக் கொண்டார். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள் வாழ்த்தினர்.
பள்ளித் தலைமையாசிரியர் கூறியதாவது:
பள்ளியில், ஊரக வளர்ச்சித் துறையால், குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக, 2022-23ம் கல்வியாண்டில், 1.15 கோடி மதிப்பில் 8 வகுப்பறைகளுடன் கூடிய இரு கட்டடங்களும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில், ஆரக்கல் பூமி என்.ஜி.ஓ., நிறுவனத்தினரால் இருபாலர் கழிப்பறை கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிப்பறைகள், கற்கும் சூழலை மேம்படுத்த வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில பேச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி, கம்ப்யூட்டர் வழி கற்றல் முறை வசதிகள் என பல்வேறு சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.