அம்ருதா மற்றும் எம்சிடிஇ ஒப்பந்தம்: தேசிய பாதுகாப்புக்கான புதிய முயற்சி
அம்ருதா மற்றும் எம்சிடிஇ ஒப்பந்தம்: தேசிய பாதுகாப்புக்கான புதிய முயற்சி
UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM
ADDED : ஜூலை 19, 2025 05:41 PM

கோவை:
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் டிஜிட்டல் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கமாக, கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடம் மற்றும் மஹோவில் உள்ள டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் இராணுவக் கல்லூரி (எம்சிடிஇ) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், சைபர் பாதுகாப்பு, தொழில்நுட்ப உட்பொருத்தல் மற்றும் ராணுவ தேவைகளுக்கான சிறப்பு பயிற்சிகளை மையமாகக் கொண்டதாகும். இதில், அம்ருதாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறனும், எம்சிடிஇ-யின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்தன்மையும் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இரு நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளன:
*ராணுவம் இன்று சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு உருவாக்குதல்
*பயிற்சி தொகுப்புகள், சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகியகால பயிற்சிகள் வடிவமைத்தல்
*மாணவர் மற்றும் பேராசிரியர் பரிமாற்றம்
*எதிர்கால ராணுவ தேவைகளுக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்ளல்
எம்சிடிஇ-யின் துணை கமாண்டன்ட் மேஜர் ஜெனரல் கௌதம் மகாஜன் பேசுகையில் இந்த ஒப்பந்தம் ஒரு கடமையாக இல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் கள அனுபவம் இணைந்து இந்திய பாதுகாப்புக்கான நேரடி தீர்வுகளை உருவாக்கும் தளமாகும். இது இந்திய ராணுவத்தின் மாற்றம் ஆண்டு திட்டத்துக்கும் ஆத்மநிர்பர் பாரத் நோக்குக்கும் உந்துதலாக இருக்கும், என்றார்.
அம்ருதா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் அஜித் குமார், இந்த ஒப்பந்தம், புதுமையின் வழியாக நாட்டுக்கு சேவை செய்யும் அம்ருதாவின் வலுவான நோக்கத்தை பிரதிபலிக்கிறது எனக் கூறினார்.
டிபாக் கோர் இயக்குநர் பேராசிரியர் சேதுமாதவன் கூறுகையில், இந்த ஒத்துழைப்பு, ஆராய்ச்சியை பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றும் முயற்சியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையை நோக்கிச் செல்லும் முக்கியப் படியாகும், என்றார்.
இந்த ஒப்பந்தம், இந்திய ராணுவத்தின் செயல் தேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு இலக்குகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் கல்வி மற்றும் பாதுகாப்பு துறைகளின் ஒருங்கிணைந்த பயணமாகக் கருதப்படுகிறது.