குண்டு வைத்து தகர்ப்பதாக 'வீடியோ' வெளியிட்ட இன்ஜினியரிங் மாணவர் கைது
குண்டு வைத்து தகர்ப்பதாக 'வீடியோ' வெளியிட்ட இன்ஜினியரிங் மாணவர் கைது
UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 11:49 PM
சித்ரதுர்கா:
தாய் அளித்த புகாரை போலீசார் ஏற்காததால், பெங்களூரு விதான் சவுதாவை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக, வீடியோ பேசி வெளியிட்ட, டிப்ளமோ இன்ஜினியரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.
சித்ரதுர்கா செல்லகெரே டவுன் காந்திநகரை சேர்ந்தவர் பிருத்விராஜ், 22. பெங்களூரில் தனியார் கல்லுாரியில், டிப்ளமா இன்ஜினியரிங் படித்தார்.
கல்லுாரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 23 ம் தேதி பிருத்விராஜ் மொபைல் போனில், அவரது தாய் அழைத்தார். சுவிட்ச் ஆப் என்று வந்தது. பிருத்விராஜின் நண்பர்களை தொடர்பு கொண்ட போது, ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக கூறினர்.
ஆனால் பிருத்விராஜ் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த தாய், மகன் காணாமல் போனதாக, செல்லகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.
நியாயம் கேட்பேன்
நேற்று முன்தினம் மாலையில், பிருத்விராஜ் வீட்டிற்கு சென்றார். போலீசார் புகார் வாங்காதது குறித்து, அவரிடம், தாய் கூறினார். தாயை அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றார். எனது தாய் கொடுத்த புகாரை ஏன் வாங்கவில்லை என்று, போலீசாரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், மொபைல் போனில் வீடியோவில் தோன்றி, பிருத்விராஜ் பேசினார். எனது தாய் கொடுத்த புகாரை வாங்காதது குறித்து கேட்க சென்ற போது, செல்லகெரே போலீசார், எனது தாய் முன் என்னை தாக்கினர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,யிடம் சென்று நியாயம் கேட்பேன். எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.
தீவிரவாதி
பெங்களூரில் உள்ள விதான் சவுதா, ராஜ்பவன், இஸ்ரோ, பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படும், மின் இணைப்பு எங்கு உள்ளது என்று எனக்கு தெரியும். தேவைப்பட்டால் அங்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன். எனக்கு நீதி கிடைக்காவிட்டால் தீவிரவாதியாகவும் மாறுவேன்.
என்னை கைது செய்தால், பரப்பன அக்ரஹாராவில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ள செல்லின், பக்கத்து செல்லில் அடைக்க வேண்டும்' என்று பேசி இருந்தார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டார். வீடியோ வேகமாக பரவியது.
இதை பார்த்த, செல்லகெரே போலீசார், நேற்று காலையில் பிருத்விராஜை கைது செய்தனர். அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

