சிறார்களுக்கு வில் வித்தை பயிற்சி அளிக்கும் இத்தாலியர்
சிறார்களுக்கு வில் வித்தை பயிற்சி அளிக்கும் இத்தாலியர்
UPDATED : பிப் 08, 2025 12:00 AM
ADDED : பிப் 08, 2025 06:15 PM

உத்தரகன்னடா:
நாட்டில் பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும், வில் வித்தைக்கு தனி மவுசு உள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு வில் வித்தை பயிற்சி அளிக்கும் பள்ளி குமட்டாவில் உள்ளது. இங்குள்ள மாணவ- மாணவியர் வில் வித்தையில் சிறந்து விளங்குகின்றனர்.
உத்தரகன்னடா, குமட்டாவின், சிரகுஞ்சி கிராமத்தில் சாந்தாபாய் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு மாணவ - மாணவியருக்கு வில் வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்தரகன்னடாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் இத்தாலி உள்ளது. இந்த இரண்டையும் இணைப்பது வில் வித்தை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆச்சரியம் என்றாலும் உண்மை.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமம் சிரகுஞ்சி. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி மிகவும் பழமையானது. இப்பள்ளியில் புராதன வீர கலையான வில் வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தாலியில் வசிக்கும் சர்வதேச வில் வித்தை நிபுணர் டேனியல் ரோசோ என்பவர், மாணவ - மாணவியருக்கு வில் வித்தை பயிற்சி அளிக்கிறார். அவர்களும் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
வில் வித்தையில் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ள, கோ எக்கோ கிளப் என்ற அமைப்பு, சிரகுஞ்சி கிராமத்தில் பள்ளி சிறார்களுக்கு வில் வித்தை பயிற்சி அளிக்க வேண்டும் என, டேனியல் ரோசோவிடம் வேண்டுகோள் விடுத்தது.
இதை ஏற்று, அவர் குமட்டாவுக்கு வந்தார். கிராமத்தில் அகாடமி துவங்கி மாணவ - மாணவியருக்கு வில் வித்தை பயிற்சி அளிக்கிறார். இங்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும், இத்தாலி மொழியில் நடத்தப்படுகின்றன.
கர்நாடகாவிலேயே முதல் முறையாக, இத்தாலி மொழியில் நிகழ்ச்சி நடத்திய பள்ளி என்ற பெருமை, சிரகுஞ்சி பள்ளிக்கு கிடைத்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறார்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் என பலரும் இத்தாலி மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டு சரளமாக பேசுகின்றனர். வில்வித்தையில், டேனியல் ரோசோ, சர்வதேச அளவில் பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
சிரகுஞ்சி கிராமத்து பள்ளியின், 200 மாணவ - மாணவியர் வில் வித்தை கற்று தேர்ந்துள்ளனர். போட்டிகளிலும் பங்கேற்கின்றனர்.