UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:44 AM
கொப்பால்:
அங்கன்வாடிக்கு வழங்கப்பட்ட மசாலா பாக்கெட்டுகள், ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களே விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொப்பால், காரடகியின் குன்டூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன், அங்கன்வாடியில் சிறார்களுக்கு முட்டை வழங்கி, அதை பறித்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊழியர்களின் செயலை பலரும் வன்மையாக கண்டித்தனர். இதே காரடகியில் அங்கன்வாடியின் மசாலா பாக்கெட்டுகள், ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டது.
காரடகியின் ஒரு ஹோட்டலில், அங்கன்வாடிக்கு சொந்தமான மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. நேற்று காலையில், இதை பொது மக்கள் சிலர் கவனித்தனர். அங்கன்வாடியின் உணவுப் பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாத்ருபூர்ணா திட்டத்தின் கீழ், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்கள், சிறார்களுக்கு அங்கன்வாடி மூலம் ஊட்டச்சத்தான உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இதற்காக மகளிர், குழந்தைகள் நலத்துறை சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்குகிறது.
மசாலா பொருட்கள், சாம்பார் பவுடர் உட்பட பல்வேறு பொருட்களை அங்கன்வாடி ஊழியர்கள் திருட்டுத்தனமாக ஹோட்டல், கடைகளுக்கு விற்று பணம் சம்பாதிப்பதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய பொருட்கள், கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.
ஹோட்டல்களில் தயாரிக்கும் உணவு, சிற்றுண்டிகளுக்கு, அங்கன்வாடிகளின் மசாலா பொருட்கள் பயன்படுகின்றன. காரடகியில் உணவு தானியங்கள், மசாலா பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
இது தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றம்சாட்டினர்.