தினக்கூலி பேராசிரியர் நியமனம் முடிவை கைவிட்டது அண்ணா பல்கலை
தினக்கூலி பேராசிரியர் நியமனம் முடிவை கைவிட்டது அண்ணா பல்கலை
UPDATED : நவ 23, 2024 12:00 AM
ADDED : நவ 23, 2024 07:45 PM

சென்னை:
தினக்கூலி அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் முடிவை, அண்ணா பல்கலை கைவிட்டுள்ளது. அதேநேரத்தில், ஆசிரியரல்லாத பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியிடங்களில், தற்காலிக அடிப்படையில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் பணியில், அந்தந்த கல்லுாரி நிர்வாகங்கள் ஈடுபடலாம்.
அதன்படி, தினக்கூலி அடிப்படையில், பேராசிரியர்கள், கற்பித்தல் அல்லாத பணியிடங்களை, அவுட்சோர்சிங் முறையில் நிரப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தினக்கூலி அடிப்படை யில் பேராசிரியர்கள் நியமிக்கப்படும் அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அந்த அறிவிப்பை மட்டும், அண்ணா பல்கலை திரும்ப பெற்று உள்ளது.
அதே நேரத்தில், கற்பித்தல் அல்லாத பணியிடங்களை தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பலாம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கக்கூடாது. முறையான அறிவிப்பு வெளியிட்டு, நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.