அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை செய்யாமல் விளம்பர நாடகம்: அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை செய்யாமல் விளம்பர நாடகம்: அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
UPDATED : டிச 18, 2025 07:55 AM
ADDED : டிச 18, 2025 07:56 AM
சென்னை:
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் சுகாதார அமைச்சர்,விளம்பர நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, கடந்த மே மாதம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 கல்லூரிகளில், போதிய மருத்துவர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக அரசு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தனது பங்குக்கு ஒரு விளம்பர நாடகத்தை அரங்கேற்றுவதோடு, தனது பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறார். இதனால், பாதிக்கப்பட்டது, ஏழை எளிய பொதுமக்களே.
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவமனை வளாகம், போதிய மருத்துவர்கள், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

