அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: கவர்னருக்கு அமைச்சர் பதில்
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: கவர்னருக்கு அமைச்சர் பதில்
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:36 AM

சென்னை:
சட்டத்திற்கு உட்பட்டே அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதி இல்லாததால், அக்குழுவை கலைத்து, புதிய குழுவை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தி இருந்தார்.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து அறிவிக்கை வெளியிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அரசுக்கு பரிந்துரை செய்யவே முடியும். மாநில அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பல்கலை நிதிநல்கை குழுவுக்கு ஆதரவாக கவர்னர் செயல்பட்டு வருகிறார். பல்கலை சட்டத்திற்கு உட்பட்டு, தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிப்பதே அவரது பதவிக்கு அழகு.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடயூறு செய்கிறார். இனியாவது அவர் தனது செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கோவி செழியன் கூறியுள்ளார்.