UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 09:14 PM

சென்னை:
சித்தா மருத்துவ பல்கலை அமைக்க, சட்டசபையில் மீண்டும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், சர்வதேச ஹோமியோபதி மாநாடு - 2025 நேற்று நடந்தது.
இந்த மாநாட்டில், 100 ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு கொண்ட, ஹோமியோ விஷன் 2025 என்ற நுாலை வெளியிட்டு, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ், மதுரை அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி மற்றும் 12 தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. நவீன சிகிச்சை முறைகளும், மாற்று மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, இன்றைய மருத்துவத் துறையின் அவசியமாகும்.
சென்னை மாதவரத்தில், சித்தா மருத்துவ பல்கலை அமைக்க, தமிழக கவர்னர் மூன்று ஆண்டுகளாக அனுமதி வழங்கவில்லை. முதல்வர் வாயிலாக, மீண்டும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.