UPDATED : ஏப் 06, 2025 12:00 AM
ADDED : ஏப் 06, 2025 07:59 AM
திருப்பூர்:
திருப்பூரில் நடைபெறும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மாணவர் மகிழ்ச்சி
சபரி கீர்த்தி, காந்தி நகர்:
பிளஸ் 2 முடித்ததும், ஏதாவது டிகிரி படிக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். பெண்களும், நல்ல வேலைக்கு செல்லும் வகையில், அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். வழிகாட்டி நிகழ்ச்சியில், என் தந்தையுடன் பங்கேற்றதால், உயர்கல்வியை தேர்வு செய்வது எளிதாகிவிட்டது.
ஹரீஷ், டி.பி.என்., கார்டன்:
பள்ளிக்கல்வியை முடித்து, பிளஸ் 2 தேர்வில், எவ்வளவுதான் மதிப்பெண் பெற்றாலும், நமது எதிர்காலத்தை வளமானதாக கட்டமைக்க, கல்லுாரி படிப்பை சரியாக தேர்வு செய்ய வேண்டும். எனது நண்பர்களுடன் வந்து, கண்காட்சி வளாகத்தை முதலில் பார்வையிட்டோம்; துறைசார்ந்த நிபுணர்களின் அறிவுரைகள், எங்களுக்கு தெளிவாக முடிவு செய்யும் திறனை வழங்கியுள்ளன.
ஸ்ரீநிதி, கணக்கம்பாளையம்:
வணிகவியல் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என, மனதில் முடிவு செய்திருந்தேன்; அதற்கான கூடுதல் விவரங்களை பெற, வழிகாட்டி நிகழ்ச்சிக்காக காத்திருந்தேன்.கருத்தரங்கு முழுவதையும் கவனித்து, முடிவு செய்துள்ளேன். கல்லுாரிகளின், கல்வி முறைகள் மற்றும் கூடுதல் வசதிகள் குறித்தும், கல்லுாரி ஸ்டால்களில் பார்த்து தெரிந்துகொண்டேன்.
சக்திநாராயணன், கொங்கு மெயின் ரோடு:
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் தொடர்பான கல்லுாரி படிப்பை தொடரலாம் என்று திட்டமிட்டுள்ளேன். தினமலர் வழிகாட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எதிர்காலத்துக்கு எந்த படிப்பை எடுக்கலாம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருப்பேன்; வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சியால், புதிய தெளிவு பிறந்துள்ளது.
வர்ஷா, அவிநாசி:
பொறியியல் மற்றும் கலை பிரிவுகளில் உள்ள படிப்புகள், அவற்றில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், வருவாய் போன்ற விவரங்களை, கருத்தரங்கு வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரே இடத்தில், 70க்கும் அதிகமான முன்னணி கல்லுாரிகள் விவரத்தையும் நேரில் விசாரித்து, தெரிந்துகொள்ள முடிந்தது.
பெற்றோர் மலர்ச்சி
செல்வமலர், பொல்லிக்காளிபாளையம்:
என் மகளை எந்த கல்லுாரியில் சேர்க்கலாம்... எந்த பாடத்தை எடுத்து படிக்க வைக்கலாம் என்றெல்லாம் மிகவும் குழப்பமான நிலையில் இருந்தேன். பாடம் தேர்வும் புரியாத புதிராக இருந்தது. வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்டு, கருத்தரங்கில் பங்கேற்ற பிறகு, தெளிவு பிறந்துள்ளது.
புவனேஸ்வரி, கொங்கு மெயின் ரோடு:
எனது மகளுக்கு, சரியான கல்லுாரியை தேர்வு செய்ய, ஒரு கல்லுாரிக்காக கோவை சென்றுவர, ஒருநாள் செலவிட வேண்டியிருந்தது. தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், ஒரே இடத்தில், முன்னணி கல்லுாரிகள் பங்கேற்றுள்ளதால், இரண்டு மணி நேரம் ஸ்டால்களை பார்த்து, பல்வேறு விவரங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. மாணவ, மாணவியருக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் சரியான வழிகாட்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது.
கவிதா, வெள்ளியங்காடு:
ஏ.ஐ., டிஜிட்டல் என்றெல்லாம் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. பல்வேறு படிப்புகள் குறித்து நமக்கு தெரிவதே இல்லை; சில படிப்புகளை படித்து முடித்தால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கருத்தரங்கில் கூறினர். எனது மகளும் அனைத்து விவரங்களையும் கேட்டு, குறித்தும் வைத்துள்ளார். இன்றே, நல்ல கல்லுாரியை தேர்வு செய்துவிட்டோம்.
கனகராஜ், தாந்தோணி, உடுமலை:
கிராமப்புற மாணவ, மாணவியருக்கு, அடுத்து எந்த கல்லுாரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற தெளிவு கிடைப்பதில்லை. தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் செலவிட்ட நான்கு மணி நேரத்தில், பல்வேறு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டோம்.
கல்லுாரிகளின் ஸ்டால் களை பார்த்து, கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விசாரித்துக்கொண்டோம். கல்லுாரி படிப்பை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பம் இருந்து வந்தது; இன்று, தெளிவு பிறந்துள்ளது.

