அரசு பணிக்கு தமிழில் 40 சதவீத மார்க் நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு
அரசு பணிக்கு தமிழில் 40 சதவீத மார்க் நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு
UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 03:53 PM

சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற, தமிழக அரசின் அரசாணையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனை சட்டத்தில், கடந்த 2021ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசு பணிக்கான தேர்வில், தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும்.
இல்லாவிட்டால், பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள்கள் திருத்தப்படாது என, டிசம்பரில் அரசாணை வெளியானது. கடந்த ஜனவரியில், காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டது.
இதையடுத்து, தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்தும், தேர்வாணையத்தின் அறிவிப்பை எதிர்த்தும், குரூப் - 4 தேர்வுக்கு தகுதி பெற்ற 10 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குரூப் - 4 பதவிகளில் இருப்பவர்கள், மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு, தமிழில் புலமை பெற்றிருப்பது அவசியம். எனவே, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, இந்த வழக்கில் வாதிட உள்ளதாக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்தார்.
இதையடுத்து, முந்தைய முடிவை மாற்றிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.