UPDATED : ஜன 29, 2025 12:00 AM
ADDED : ஜன 29, 2025 09:05 AM
சென்னை:
சென்னையில் மக்கள் மருந்தகத்தை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அரசு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஜெனரிக் மற்றும் பிற மருந்துகளை, குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதல் கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம்., அல்லது டி.பார்ம்., சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள், http://www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில், பிப்., 5க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.
சொந்த இடம் எனில், அதற்கான சொத்து வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, வாடகை எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்த பத்திரம் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம் அமைப்போருக்கு, அரசு மானியமாக, 3 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில், கூட்டுறவு வங்கி கடன் பெற வழி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.