பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி; ஊக்க தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி; ஊக்க தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : டிச 17, 2024 12:00 AM
ADDED : டிச 17, 2024 09:07 AM

கோத்தகிரி:
கோத்தகிரியில் இயங்கி வரும், நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் (நாவா) சார்பில், பழங்குடியின மாணவர்களின் உயர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க செயலாளர் ஆல்வாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்து, உயர்கல்வி பயிலும் நீலகிரியில் வாழும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் சார்பில், ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமூக சேவகர் முல்ஜி நிதியில் இருந்து வழங்கப்படும் இந்த ஊக்கத் தொகையை பெற விரும்பும் மாணவ மாணவியர், தங்களின் விண்ணப்பங்களை, நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ, நாவா அலுவலகத்தில் உடனடியாக சேர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், தற்போது கல்வி பயிலுவதற்கான சான்று இணைப்பது அவசியம்.
அத்துடன், கடைசியாக பெறப்பட்ட மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இளங்கலை, முதுகலை படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ), பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பட்டப் படிப்புகளுக்கும், 3000 ஆயிரம் முதல், 6000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை, செயலாளர், நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம், கோட்ட ஹால் ரோடு, கோத்தகிரி, 643217 என்ற முகவரியில் அளிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு, 04266 - 271596 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.