பத்ம விருதுக்கு ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
பத்ம விருதுக்கு ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஏப் 29, 2026 09:10 AM
ADDED : ஏப் 29, 2026 09:23 AM

புதுடில்லி:
“வரும் 2027ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளையும், விண்ணப்பங்களையும் பொதுமக்கள் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்” என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
நம் நாட்டின் உயரிய விருதாக கருதப்படுவது பாரத் ரத்னா. அதற்கு, அடுத்தப்படியாக பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள், கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அளிக்கும் பரிந்துரைகளை, மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு பரிசீலித்து, பத்ம விருதாளர்களை தேர்வு செய்து, மத்திய அரசிடம் பரிந்துரைக்கும். இதன்படி, தேர்வானவர்களின் பெயர்களை, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, ஜனாதிபதி ஒப்புதலுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.
அதன்பின், பத்ம விருதாளர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
இதன்படி, 'வரும் 2027ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளையும், அதற்கான விண்ணப்பங்களையும் பொதுமக்கள் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
'இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
