மருந்தாளுனர்கள் பணியிடங்களில் பி.பார்ம் படித்தவர்கள் நியமனம்
மருந்தாளுனர்கள் பணியிடங்களில் பி.பார்ம் படித்தவர்கள் நியமனம்
UPDATED : ஆக 23, 2024 12:00 AM
ADDED : ஆக 23, 2024 09:02 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:
பார்மசி துறையில் டிப்ளமோ படித்தவர்கள் இதுவரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பட்டம்(டிகிரி) முடித்தவர்களும் நியமிக்கப்படுவதால் வேலைவாய்ப்பு பறிபோகும் என டிப்ளமோ படித்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பார்மசி துறையில் டிப்ளமோ, டிகிரி, பி.எச்.டி., பார்ம்-டி போன்ற படிப்புகள் உள்ளன. இதில் டிப்ளமோ படித்தவர்கள் மருந்து கடைகளை நடத்துவது, அவற்றில் பணிபுரிந்தும் வருகின்றனர். மருந்து விற்பனை பிரதிநிதிகளாகவும், அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். டிகிரி முடித்தவர்கள் மருந்து கட்டுப்பாட்டுத்துறையில் மருந்து ஆய்வாளர்களாகவும், மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும், கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு டாக்டர்களுக்கு இணையான படிப்பு என கூறப்பட்ட பார்ம்- டி படிப்பு முடித்தவர்களும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பணி நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர்கள் பணியிடத்திற்கு டிகிரி முடித்தவர்கள் மட்டுமின்றி பி.எச்.டி. படித்தவர்களும் தேர்வில் வெற்றி பெற்று நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் டிப்ளமோ படித்து விட்டு அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருந்து பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் மருந்தாளுனர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். எதிர்காலத்தில் டிப்ளமோ பார்மசி படித்தால் பயனில்லாத நிலை தான் ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் அரசு மருந்தாளுனர்கள் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்களை மட்டுமே தேர்வு செய்யவும், டிகிரி முடித்தவர்களை மருந்து கட்டுப்பாட்டுத்துறையில் மருந்து ஆய்வாளர்களாக தேர்வு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ளமோ படித்த பார்மசிஸ்ட்டுகள் எதிர்பார்க்கின்றனர்.