ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க உ.வே.சா., நுாலகத்தை அணுகுங்கள்
ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க உ.வே.சா., நுாலகத்தை அணுகுங்கள்
UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:29 AM

சென்னை:
ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள உ.வே.சாமிநாத அய்யர் நுால் நிலையத்தை அணுகலாம் என அதன் தலைவர் விஸ்வநாதன் பேசினார்.
சென்னை, உ.வே.சாமிநாத அய்யர் நுால் நிலையத்தில், அகவல் கொத்து நுால் வெளியீடும், பெரியபுராண சுவடிகளும் பதிப்புகளும் என்ற பயிலரங்கமும் நேற்றும் இன்றும் நடக்கின்றது.
தொகுத்தார்
அதில், அகவல் கொத்து நுாலை, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், சேக்கிழார் ஆராய்ச்சி மையத் தலைவருமான எஸ்.ஜெகதீசன் வெளியிட, சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற வி.ஐ.டி., பல்கலை வேந்தரும், உ.வே.சாமிநாத அய்யர் நுாலகத்தின் தலைவருமான விஸ்வநாதன் பேசியதாவது:
உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் படிக்க முற்பட்ட போது, ஆங்கிலம் படித்தால் இவ்வுலகுக்கு நல்லது; சமஸ்கிருதம் படித்தால் அவ்வுலகுக்கு நல்லது; தமிழை ஏன் படிக்கிறீர்கள் என்றார்களாம். அவர்களிடம், தமிழை படித்தால் எவ்வுலகுக்கும் நல்லது என்றாராம்.
அப்படிப்பட்டவர், தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை தேடித்தேடி தொகுத்தார். அவர், 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தமிழுக்கு சேவை செய்தார். அவர் சேகரித்த சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
இந்த நுாலகத்தின் தலைவராக இருந்த வி.சி.குழந்தைசாமி தான், என்னை தலைவராக்கினார். அதன்பிறகு தான், தமிழின் சுவைக்காக பக்தி இலக்கியங்களை படிக்கத்துவங்கி, நானே கொஞ்சம் மாறினேன்.
கோலாச்சினர்
இங்கு 300க்கும் மேற்பட்ட சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. சிவாலயம் மோகன் போன்றோர் பதிப்பிக்க துவங்கி உள்ளனர். ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க ஆர்வமுள்ளோர், உ.வே.சா., நுாலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசுகையில், பெரியபுராணத்தில் மட்டும், 37 விதமான சுவடிகள் உள்ளன. அவற்றின் பிழைகளை திருத்தி, சிவவற்றை பதிப்பித்துள்ளனர்.
பழந்தமிழ் நுால்களுக்கு உரையாசிரியர்கள் எழுதிய உரைகள் மிக முக்கியமானவை. 10 முதல் 15ம் நுாற்றாண்டு வரை உரையாசிரியர்கள் கோலோச்சி உள்ளனர். அவற்றை பற்றி இன்றைய பயிலரங்கில் அறியலாம் என்றார்.
அகவல் கொத்து நுால் குறித்து, பேராசிரியர் சுயம்பு பேசினார். அதைத் தொடர்ந்து, பெரியபுராண சுவடிகள் குறித்த பயிலரங்ம் நடந்தது. நிகழ்வில் தமிழாசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்