அசாமி உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு சிறப்பு மையங்கள் அமைக்க ஒப்புதல்
அசாமி உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு சிறப்பு மையங்கள் அமைக்க ஒப்புதல்
UPDATED : அக் 06, 2026 10:35 AM
ADDED : அக் 06, 2026 10:38 AM

புதுடில்லி:
அசாமி, பெங்காலி, மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய ஐந்து செம்மொழிகளின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக பல்கலைகளில் சிறப்பு மையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பழமையான இலக்கியங்களுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024ல், அசாமி, பெங்காலி, மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த மொழிகள் தொடர்பான படிப்புகளுக்கு சிறப்பு மையங்கள் அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அசாமி, பெங்காலி, மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழிகளின் கல்வி ஆராய்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாத்தல் மற்றும் பாரம்பரியத்தை பரப்புதல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக ஐந்து பல்கலைகளில், ஐந்து பிரத்யேக சிறப்பு மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள தேஜ்பூர் பல்கலையில் அசாமி மொழிக்கு சிறப்பு மையம் அமைக்கப்படும்.
பெங்காலி மொழிக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலையிலும், மராத்தி மொழிக்கு, மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், பாலி மொழிக்கு ஓடிஷா மத்திய பல்கலையிலும், பிராகிருதம் மொழிக்கு, குஜராத் மத்திய பல்கலையிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக அசாம், பெங்காலி, மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய ஐந்து மொழிகளும் பாதுகாக்கப்படுவதுடன், மேலும் வலுப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
