UPDATED : நவ 23, 2024 12:00 AM
ADDED : நவ 23, 2024 10:20 AM
மதுரை:
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் அடுத்தடுத்து அதிகாரிகள் பணியிட மாற்றம், ஓய்வு பெற்ற காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மாநில தொல்லியல் துறை அக்கறையின்றி செயல்படுகிறது.
இம்மகாலை உதவி இயக்குநர் தலைமையிலான அதிகாரி நிர்வகிக்க வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு முன் இங்கிருந்த உதவி இயக்குநர் சக்திவேல் இடமாறுதலில் சென்ற பின் தற்போது வரை யாரையும் நியமிக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பாக உதவி செயற்பொறியாளர் பணிஓய்வில் சென்றார். அந்த பணியிடமும் நிரப்பப்படவில்லை.
உதவி பொறியாளர் தலைமையில் மகால் செயல்படுகிறது.
இங்கு மொத்தம் 36 பேர் பணியில் உள்ளனர். அதில் வாட்ச்மேன் 4 பேர் மட்டுமே உள்ளனர். விடுமுறையின்றி ஆண்டு முழுவதும் மகாலை சுற்றிப் பார்க்க உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். 4 வாட்ச்மேன்கள் மாறி மாறி பகல், இரவு பணி பார்த்தாலும் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்தால் மற்றவர்களுக்கு சுமையாகிறது. இவ்வளவு பெரிய வளாகத்தை கண்காணிக்க கூடுதல் வாட்ச்மேன்களை நியமிக்க வேண்டும்.
தற்போது நுழைவு கட்டணமாக ரூ.10, வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.75 லட்சம் வருமானம் கிடைக்கிறது. எனவே மகாலுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை தொல்லியல் துறை தாமதமின்றி நிரப்ப வேண்டும்.