அருங்காட்சியகத்தை பார்வையிடும் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சி
அருங்காட்சியகத்தை பார்வையிடும் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சி
UPDATED : நவ 06, 2026 08:11 PM
ADDED : நவ 06, 2026 08:12 PM
கிருஷ்ணகிரி:
சென்னை அருங்காட்சியகம் தொடங்கி, 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு, 2026 - 2027ம் ஆண்டை 'அருங்காட்சியகத்தை பார்வையிடும் ஆண்டு' என அறிவித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை மன்ற மாணவ, மாணவியர், 30 பேர், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்திற்கு நேற்று வந்திருந்தனர். இவர்களுக்கு அருங்காட்சியக அரும்பொருட்கள் தொடர்பான ஒரு நாள் தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்திலுள்ள பழமையான நடுகல்லான பனகமூட்டல் வட்டு எழுத்து நடுகல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமுள்ள பூர்வாதிராயர்கள் நடுகல், சிவம்பட்டி நடுகல் ஓவியம், அகரம் ஜல்லிக்கட்டு நடுகல், ஜெகதேவி கரந்தை போர் நடுகல், சின்னகொத்துார் குதிரைப்போர் காட்சி நடுகல் ஆகிய நடுகற்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.
மேலும், கல் ஆயுதங்கள், கருப்பு சிவப்பு பானைகள், போர்க்கருவிகள், ஓலைச்சுவடிகள், விலங்கின பொருட்கள், 9 கோடி ஆண்டு பழமையான கடல் நத்தை மற்றும் கல்லாகிய மரம் மற்றும் பாலுாட்டிகளின் எலும்பு புதைப்படிவங்கள் குறித்து, காப்பாட்சியர் சிவக்குமார் எடுத்துரைத்தார். பீமாண்டப்பள்ளி பிற்கால சோழர் நடுகல் கல்வெட்டு படியெடுத்து அது மாணவர்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.
