'கோச்சிங் சென்டர்'களுக்கு செல்வதற்காக பள்ளியை மாணவர்கள் புறக்கணிக்கின்றனரா?
'கோச்சிங் சென்டர்'களுக்கு செல்வதற்காக பள்ளியை மாணவர்கள் புறக்கணிக்கின்றனரா?
UPDATED : செப் 21, 2025 12:00 AM
ADDED : செப் 21, 2025 08:10 AM
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில், தனியார் 'கோச்சிங் சென்டர்'களுக்கு செல்வதற்காக, பள்ளிகளுக்கு வருவதை மாணவர்கள் தவிர்க்காமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியம், மாநில இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதம் ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் மூன்று பள்ளிகளில், சில குறைபாடுகள் இருந்ததை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ராஜஸ்தாஜன் உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மனு தாக்கல் செய்தன. இதை சமீபத்தில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மேத்தா, அனுாப் குமார் தண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு செல்வதற்காக, பள்ளிகளுக்கு வருவதை மாணவர்கள் தவிர்க்காமல் இருப்பதை மத்திய இடைநிலை கல்வி வாரியம், ராஜஸ்தான் இடைநிலை கல்வி வாரியம் ஆகியவை உறுதி செய்ய வேண்டும்.
இதன்படி, அனைத்து பள்ளிகள் மற்றும் தனியார் கோச்சிங் சென்டர்களில் திடீர் ஆய்வு நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்.
ஆய்வின் போது, பள்ளி நேரத்தில் கோச்சிங் சென்டரில் மாணவர் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர், பள் ளி நிர்வாகம் மற்றும் கோச்சிங் சென்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வருகைப்பதிவு மிகவும் கட்டாயம். நியாயமான காரணமின்றி மாணவர் ஒருவர் பள்ளிக்கு தொடர்ச்சியாக வரவில்லை என்றால், அந்த மாணவர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் .
அவகாசம் மாணவர்களை பள்ளிகளில் இருந்து கோச்சிங் சென்டர்களுக்கு மாற்றுவது கல்வியாளர்களை மோசமாக பாதிக்கிறது. படிப்பு பாதியில் தடைப்பட்ட மாணவர்களை, பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், குறைபாடுகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட மூன்று பள்ளிகளுக்கும் நான்கு வாரம் அவகாசம் வழங்கினர்.