கல்வியில் சோடை போகின்றனரா குழந்தைகள்! எதிரொலிக்கும் கலாசார மாற்றம்
கல்வியில் சோடை போகின்றனரா குழந்தைகள்! எதிரொலிக்கும் கலாசார மாற்றம்
UPDATED : மே 14, 2024 12:00 AM
ADDED : மே 14, 2024 01:04 PM
திருப்பூர்:
அரசு, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பலர், சாதித்துக்காட்டுகின்றனர். அதேசமயம், தேர்ச்சி சதவீதம் சரிந்து வரும் பள்ளிகளும் உள்ளன. இது முரண் பாடான ஒரு சூழல்.
மாணவர்கள் பலர், கஞ்சா, குட்கா போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர் என்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது என்கின்றனர் சில ஆசிரியர்கள். தடை செய்யப்பட்ட அத்தகைய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை கண்டறிந்து, கட்டுப்படுத்த போலீசார் சார்பில், சிறப்புக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அக்குழுவினரின் செயல்பாடுகள் எந்தளவில் உள்ளது, என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை. போதை பொருள் விற்பனை குறித்து, போலீசாருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை; அப்படியிருக்க, தினசரி அவர்களால் பறிமுதல் செய்யப்படும் குட்கா, கஞ்சா பொருட்கள், அவற்றை விற்பவர்கள் மீது பதியப்படும் வழக்கு தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், அவற்றை விற்போருக்கும், பயன்படுத்தும் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும் ஒரு பயம் இருக்கும்; இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்ற எண்ணம் வரும்.
இது ஒருபுறமிருக்க, பள்ளி மாணவர்கள் பலர், ஆசிரியர்களுக்கு கீழ்படிவது இல்லை; அவர்கள் சொல் பேச்சு கேட்பதும் இல்லை. மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கிறது; பெற்றோரின் ஆலோசனை, அறிவுரையையும் மாணவர்கள் கேட்பதில்லை.
தான் தோன்றித்தனமாக செயல்படும் மாணவர்கள், கல்வியில் பின்தங்குகின்றனர் என்பதை தேர்வு முடிவு வாயிலாக உணர முடிகிறது. எனவே, மாறிவரும் மாணவர்களின் கலாசாரம், கல்வியிலும் எதிரொலிக்கிறது என்று சொல்வதில் மிகையில்லை.