தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏஜென்டிக் ஏ.ஐ., தொழில்நுட்பம் எதிர்கொள்ள பல்கலைகள் தயாரா!

ஏஜென்டிக் ஏ.ஐ., தொழில்நுட்பம் எதிர்கொள்ள பல்கலைகள் தயாரா!

ஏஜென்டிக் ஏ.ஐ., தொழில்நுட்பம் எதிர்கொள்ள பல்கலைகள் தயாரா!


UPDATED : நவ 23, 2026 09:33 PM

ADDED : நவ 23, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 09:33 PM ADDED : நவ 23, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஏஜென்டிக் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், இந்திய உயர்கல்வி முறையில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என முன்னாள் யு.பி.எஸ்.சி., உறுப்பினர் கல்வியாளர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:


இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பற்றாக்குறை, காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்படாத பாடத்திட்டங்கள், ஆராய்ச்சிக் கட்டமைப்பு குறைபாடு, வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களற்ற பட்டதாரிகள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கல்வியின் அடிப்படைத் தன்மையையே மாற்றக்கூடிய ஏஜென்டிக் ஏ.ஐ., தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.

ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தகவல்கள், படங்கள், மென்பொருள் குறியீடுகள், வீடியோக்களை உருவாக்க உதவுகிறது. ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ., குறிப்பிட்ட இலக்குகளைப் புரிந்துகொண்டு, அதற்கான திட்டங்களை உருவாக்கி, முடிவுகளை எடுத்து, பல்வேறு பணிகளைத் சுயமாக ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திறன் கொண்டது. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்து, பிரத்யேக கற்றல் திட்டங்களை உருவாக்கவும், ஆராய்ச்சியாளர்களுக்குத் தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட பணிகளில் உதவவும் முடியும்.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆசிரியர்கள் தகவல்களை வழங்கும் விரிவுரையாளர்களாக மட்டும் இல்லாமல், மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வழிகாட்டிகளாக மாற வேண்டும்.

இதற்காக யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., மூலம் ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் ஏ.ஐ., வழங்கும் பதில்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றைச் சரிபார்த்து சுயமாகச் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கும் திறன், படைப்பாற்றல், தகவல் தொடர்பு, கூட்டுச் செயல்பாடு, அறநெறி சார்ந்த முடிவெடுக்கும் திறன்கள் மாணவர்களுக்கு அவசியம்.

கணினி அறிவியல் மாணவர்களுக்கு மட்டுமின்றி, மருத்துவம், வேளாண்மை, சட்டம், மேலாண்மை , கலை உள்ளிட்ட அனைத்துத் துறை மாணவர்களுக்கும் ஏ.ஐ., தொடர்பான அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும். மனப்பாடம் செய்து எழுதும் தேர்வு முறைகளுக்குப் பதிலாக, திட்டப்பணிகள், செய்முறை விளக்கங்கள், வாய்மொழித் தேர்வுகள், ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் நடைமுறைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

இந்திய பல்கலைகளில் ஏ.ஐ., ஆராய்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும். அரசுப் பல்கலைகள், கிராமப்புறக் கல்லுாரிகளுக்கு தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகளும் நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகம், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினர் இணைந்து, உயர்கல்வியில் ஏஜென்டிக் ஏ.ஐ., பயன்பாட்டுக்கான தேசிய ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தொடங்க வேண்டும். முதற்கட்டமாக 25 முதல் 50 பல்கலைகள் தேர்வு செய்து முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தலாம்.

2047க்குள் வளர்ச்சியடைந்த நாடுஎன்ற இலக்கை அடைய, இந்திய பல்கலைகள் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றில் முன்னேற வேண்டும். ஏ.ஐ., மனிதத் திறன்களை மேம்படுத்த உதவுமே தவிர, ஆசிரியர்களின் வழிகாட்டுதல், மனித அறிவாற்றல், அறநெறிப் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு மாற்றாக அமைய முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us