உதவிப்பேராசிரியர் பணி எழுத்துத் தேர்விற்கு ஏற்பாடு!
உதவிப்பேராசிரியர் பணி எழுத்துத் தேர்விற்கு ஏற்பாடு!
UPDATED : டிச 24, 2025 11:41 AM
ADDED : டிச 24, 2025 11:53 AM
ராமநாதபுரம்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் உதவிப்பேராசிரியர் பணிக்காக டிச.,27 ல் எழுத்துத்தேர்வு எழுத ராமநாதபுரத்தில் இரு மையங்களில் முன்னேற்பாடுகள் நடக்கிறது. இத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு மற்றும் அரசு கல்லுாரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச.,27ல் 38 மாவட்டங்களில் 195 மையங்களில் நடைபெற உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்யது அம்மாள் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.
தேர்வு தொடர்பாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் மையங்களின் பொறுப்பாளராகவும், செய்யது அம்மாள் பள்ளியில் பறக்குபடை அலுவலராக ஆர்.டி.ஓ., ஹபீபுர் ரகுமான், ஏ.வி.எம்.எஸ். பள்ளியில் துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரு தேர்வு மையங்களிலும் 525 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவ்விடங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி மேற்பார்வையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று (டிச.,27) காலை 8:30மணிக்கு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.
தேர்வு எழுத கருப்பு நிறம் கொண்ட பந்துமுனை பேனா, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள நுழைவுச்சீட்டு, பாஸ்போர்ட், ஆதார், டிரைவிங் லைசன்ஸ், பான்கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் கொண்டுவர வேண்டும். நுழைவுச் சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லை எனில் 3 பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோவை கொண்டு வந்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். காலை 9:00மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும். அதன் பிறகு வருபவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

