கட்டாய கல்வி சட்ட நிலுவைத்தொகை; இரு ஆண்டுகளாக பள்ளி நிர்வாகிகள் காத்திருப்பு
கட்டாய கல்வி சட்ட நிலுவைத்தொகை; இரு ஆண்டுகளாக பள்ளி நிர்வாகிகள் காத்திருப்பு
UPDATED : டிச 18, 2025 11:09 PM
ADDED : டிச 18, 2025 11:12 PM

கடலுார்:
கட்டாய கல்வி சட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கட்டணத்தை தமிழக அரசு வழங்குமா என கடலுார் மாவட்ட பள்ளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கடந்த, 2009ம் ஆண்டு, ஆக. 4ம் தேதி, லோக்சபாவில் இயற்றப்பட்டது. இந்த கல்வி உரிமைச் சட்டத்தின் படி, இந்தியாவில், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, 25 சதவீதிம் இட ஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
இந்த சட்டம் கடந்த, 2010ம் ஆண்டு, ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. அனைத்து தனியார் பள்ளிகளும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடங்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
புகழ்பெற்ற பள்ளியாக இருந்தாலும் பள்ளிக்கு 2 கி.மீ., தொலைவில் வசிப்பவர்கள், பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இந்த கல்விச் சட்டம் பொருந்தாது.
பிரபலமான தனியார் பள்ளிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தால் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.
இந்த திட்டத்தினால் தனியார் நர்சரி பள்ளிகளில் ஏழை மாணவர்களும் கல்வி பயின்று வந்தனர். மாணவர்கள் சேர்க்கை வழங்கும் பள்ளிகளுக்கு மத்திய அரசு மூலம் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டு வந்தது.
சில ஆண்டுகள் இந்த கட்டணம் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த, 2023-24, 2024-25ம் ஆண்டுகளுக்கான கட்டணம் மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டும் மத்திய அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்குமோ என்கிற சந்தேகத்தின் காரணமாக நடப்பாண்டில், கட்டாய கல்வியில் மாணவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.
கடந்த 2 ஆண்டுகள் கட்டாய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம், அவர்கள் படித்த பள்ளிகளுக்கு, இன்னும் தமிழக அரசு வழங்காமல் உள்ளது. அதாவது புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் ஏற்காததால் அது தொடர்பான நிதியை மத்திய அரசு 2 ஆண்டுகளாக முடக்கி வைத்திருந்தது, தற்போது விடுவிக்கப் பட்டுவிட்டது.
கட்டாய கல்விக்காக தமிழக பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியது 600 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி தமிழக பள்ளிகளுக்கு கட்டாய கல்வி கட்டணம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வழக்கமாக இந்த உத்தரவு வெளியிட்டு குறிப்பிட்ட சில தினங்களில், கட்டணம் கிடைத்துவிடும். ஆனால் தற்போது வரை கல்வி கட்டணம் தமிழக அரசிடம் இருந்து விடுவிக்கப்படவில்லை.
இதனால் பள்ளி நிர்வாகிகள் தமிழக அரசு நிலுவைத்தொகையை எப்போது வழங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

