UPDATED : ஆக 28, 2026 07:31 PM
ADDED : ஆக 28, 2026 07:32 PM
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கு, வரும் 4ம் தேதி கலைப்போட்டிகள் நடைபெற உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக கலை பண்பாட்டுத் துறை, ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, 2025 - 26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை போட்டிகள், குரலிசை, பரத நாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில், வரும் 4ம் தேதி, ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்போர், 5 - 8, 9 - 12 மற்றும் 13 - 16 ஆகிய வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம், மூன்று நிமிடங்கள், அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் வரை பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் அனுமதிக்கப்படும்.
ஓவியம் வரைய தேவையான பொருட்களை, போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் விபரம் பெற, 'மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, காஞ்சிபுரம் - 631 502' என்ற முகவரியிலும், 044 - 2726 9148 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
