இசை இல்லாமல் கலை! மாணவர்கள் திறன் வெளியாவது கேள்விக்குறி
இசை இல்லாமல் கலை! மாணவர்கள் திறன் வெளியாவது கேள்விக்குறி
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 08:46 AM
பொள்ளாச்சி:
ஒளி மற்றும் ஒலி பதிவுகள் துல்லியமாக கிடைக்கப்பெறாததால், கலைத்திருவிழா போட்டிகளை வீடியோ பதிவு செய்வதில், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இதற்கு, இசை ஆசிரியர்கள் இல்லாததே காரணம், என, அதிருப்தி நிலவி வருகிறது.
மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த, கடந்த இரு ஆண்டுகளாக, அரசுப்பள்ளிகளில், கலைத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடப்பாண்டு, ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, பல்வேறு பிரிவுகளில், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டி நடத்தப்படவுள்ளது. ஆனால், ஒவ்வொரு கட்ட போட்டி முடிவுகளும், பள்ளி அளவில் ஒரே முறை பதிவு செய்யப்படும் வீடியோ வாயிலாக, தீர்மானிக்கப்படவுள்ளது.
அதாவது, பள்ளி அளவில் பேச்சுப்போட்டி நடத்தினால், அதில் முதலாவதாக இடம் பிடிக்கும் மாணவரின் பேச்சு, வீடியோவாகபதிவு செய்து, எமிஸ் தளத்தில் பதிவிடப்படும். வட்டார அளவிலான நடுவர்கள், ஒவ்வொரு அரசுப்பள்ளியில் இருந்தும், இவ்வாறு பதிவிடப்பட்டிருக்கும் பேச்சு வீடியோக்களை பரிசீலனை செய்து, அதன் வாயிலாக முதலிட மாணவரை தேர்வு செய்வர்.
தொடர்ந்து, மாவட்ட நடுவர்கள், ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் வீடியோக்களை பரிசீலித்து, முதல் இடத்துக்கான மாணவரை தேர்வு செய்வர். இவ்வொரு ஒவ்வொரு கட்ட போட்டிக்கும், ஒரே முறை பதிவு செய்யப்படும் வீடியோவைபரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக, பள்ளி அளவில் சிறந்த முறையில் வீடியோக்களை பதிவு செய்ய ஆசிரியர்கள் முற்பட்டாலும், ஒளி மற்றும் ஒலி அமைப்பில் பின்னடைவு ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மாநில போட்டி தகவல் இல்லை
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு கட்டமாக நேரடியாக போட்டிகள் நடத்தப்படும் போது, ஒவ்வொரு மாணவரும் தங்களின் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சி எடுப்பர். தற்போது, பள்ளி அளவில், ஒரே ஒரு முறை பதிவு செய்யப்படும் வீடியோவை வைத்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதனால், பள்ளிகளில், ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்கும் மாணவர்களின் திறனை, சிறந்த முறையில் ஒளி மற்றும் ஒலியுடன் வீடியோ பதிவு செய்ய முனைப்பு காட்டப்படுகிறது.
ஆனால், அதற்கான கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வசதிகள் பள்ளிகளில் கிடையாது.இதேபோல, மாணவர்களின் தனித்திறன் மேம்பாட்டினைக் கண்டறிய துவக்க, நடுநிலை பள்ளிகளில், இசை ஆசிரியர் பணியிடம் இருந்தும் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
தவிர, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சொற்ப எண்ணிக்கையிலான இசை ஆசிரியர்கள் இருந்தாலும், அதற்கான கல்வித்தகுதி பெறாமல் பணியில் உள்ளனர். இவ்வாறு இருக்கையில், பள்ளி அளவில், ஒரே முறை பதிவு செய்யப்படும் வீடியோவை வைத்து, மாவட்ட அளவிலான வெற்றியாளர்களை தேர்வு செய்வது வேடிக்கையாக உள்ளது.
அதிலும், மாநில அளவிலான போட்டி எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்த தகவல், இதுவரை வந்து சேரவும் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.