செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவு திட்டம்: சுமார் 2,500 மகளிருக்கு பயிற்சி - மத்திய அரசு தகவல்
செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவு திட்டம்: சுமார் 2,500 மகளிருக்கு பயிற்சி - மத்திய அரசு தகவல்
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 08:52 AM
புதுடெல்லி:
மகளிரின் டிஜிட்டல் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில், தேசிய மகளிர் ஆணையம் யசோதா செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் சிறப்பான ஒரு எழுத்தறிவு திட்டத்தை 2025 மே மாதம் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம், இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் தனியுரிமை, பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மகளிருக்கு அதிகாரமளிப்பது முக்கிய இலக்காக இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,500 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று எழுந்த கேள்விக்கு பதிலளிக்கையில், அமைச்சர் கூறுகையில், சுய உதவி குழுக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மேயர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆஷா பணியாளர்கள், சிறு தொழில் மேற்கொள்ளும் பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரக மற்றும் சிறு நகரங்களிலுள்ள பெண்கள் இதில் அதிகமாக பங்கேற்றுள்ளனர், என்றார்