கோவையில் ரூ.300 கோடியில் கலைஞர் நுாலகம்; இ-டெண்டர் அறிவிப்பு
கோவையில் ரூ.300 கோடியில் கலைஞர் நுாலகம்; இ-டெண்டர் அறிவிப்பு
UPDATED : செப் 13, 2024 12:00 AM
ADDED : செப் 13, 2024 10:19 AM

கோவை:
கோவையில் ரூ.300 கோடியில் ஆறு தளங்களுடன் பிரமாண்டமாக கலைஞர் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது.
அக்., 16ம் தேதி பிற்பகல், 3:00 மணிக்குள் இ-டெண்டர் முறையில் கோர அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா நினைவாக, கோவையில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆய்வுக்கு பிறகு, செம்மொழி பூங்காவுக்கு அருகே தமிழ்நாடு ஓட்டலுக்கு பின்புறமுள்ள இடத்தில் பிரமாண்டமாக நுாலகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு, தமிழக அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், தமிழக பொதுப்பணித்துறையால் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
அக்., 16ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்குள் இ-டெண்டர் முறையில் கோர வேண்டும்; அன்றைய தினம் மாலை, 4:00 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதில், கட்டுமான பணி ரூ.245 கோடியில் மேற்கொள்ளப்படும். புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்களுக்கு ரூ.50 லட்சம், கம்ப்யூட்டர்கள், படிப்பதற்கான வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்வதற்கு ரூ.5 லட்சம் என மொத்தம், 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து, 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில ஆறு தளங்களுடன் இந்த நுாலகம் பிரமாண்டமாக அமைகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கோவையின் புதிய அடையாளமாக இந்நுாலகம் அமையும். ஆறு தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக இருக்கும்; ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் வகையில் அறிவியல் மையமும் இணைத்து கட்டப்பட உள்ளது. கோவை மக்களின் தேடலுக்கு இந்நுாலகம் தீர்வாக அமையும் என்றனர்.