ஆரோவில் அறக்கட்டளை மத்திய உயர்கணினி மையத்துடன் ஒப்பந்தம்
ஆரோவில் அறக்கட்டளை மத்திய உயர்கணினி மையத்துடன் ஒப்பந்தம்
UPDATED : ஏப் 07, 2025 12:00 AM
ADDED : ஏப் 07, 2025 09:09 AM
வானூர் :
ஆரோவில் அறக்கட்டளையும், மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய உயர்கணினி மேம்பாட்டு மைய உயர்மட்ட பிரதிநிதிகள் ஆரோவில் சமூகத்தின் பல்வேறு துறைகளுடன் கலந்துரையாடினர். ஸ்மார்ட் நகர திட்டத்திற்கு மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் குறித்து ஆலோசனை நடந்தது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஆரோவிலில், மின்சாரம், நீர் மற்றும் தரவு விநியோக திறனை மேம்படுத்த ஸ்மார்ட் மீட்டரிங் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்புகளை நடைமுறைப்படுத்த உள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், மத்திய உயர்கணினி மேம்பாட்டு மைய நிர்வாக இயக்குநர் சுதர்சன், இயக்குநர் ஜெனரல் மகேஷ் எதிராஜன், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீதாராமன் கலந்து கொண்டனர்.
ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்; இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டல் பாரம்பரியப் பாதுகாப்பு, மொழிக் கணினியியல், செயற்கை நுண்ணறிவுத் தளத்திலான கலாசார முன்முயற்சிகள் மற்றும் நிலைத்தன்மைக்கான தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய துறைகளில் அறிவுப் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், மையத்தின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் கணினி தீர்வுகளில் உள்ள நிபுணத்துவத்தை, ஆரோவில்லின் பணிகளுடன் இணைக்கவுள்ளனர். ஆராய்ச்சி, பயிற்சி திட்டங்கள் மற்றும் கூட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கிறது. ஆரோவில் மனித ஒற்றுமைக்கான பார்வையை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைத்து இந்தியாவில் கலாசார மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கான ஒரு மாதிரியாக விளங்குவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. மேலும், இந்தியாவின் தேசிய இலக்குகளான டிஜிட்டல் மாற்றம் மற்றும் கலாசாரப் பாதுகாப்புடன் ஒத்துப்போகவும் இந்நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளது என கூறினர்.

