UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 09:44 AM
மதுரை:
மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு கோவை வேளாண் பல்கலையின் 2023ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கூறியதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள், சிறப்புத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் வயல்வெளி ஆய்வு, செயல்விளக்கத் திடல் விவசாயிகளுக்காக அமைத்து புதுமையான தொழில்நுட்பங்கள் உடனுக்குடன் விவசாயிகளிடம் சேர்க்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பயிர் ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், இயந்திரமயமாக்கல், கால்நடை உற்பத்தி, இயற்கை விவசாயம் போன்ற பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அவ்வப்போது விஞ்ஞானிகள் விவசாயிகள் கலந்துரையாடல் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த சேவைக்காக விருது வழங்கப்பட்டது என்றார்.