மூன்று தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிய சிறந்த ஊராட்சி பள்ளிகளுக்கான விருது
மூன்று தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிய சிறந்த ஊராட்சி பள்ளிகளுக்கான விருது
UPDATED : டிச 09, 2024 12:00 AM
ADDED : டிச 09, 2024 08:35 AM
ஊட்டி:
சிறந்த ஊராட்சி பள்ளிகளுக்கான விருது, மூன்று தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய நிதி திட்டத்தின் கீழ், தொழில் தொடங்குவதற்கு மற்றும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தொழில் கடனாக, 5 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த, 2023ம் ஆண்டு ஜன., முதல் வெளிவரும் புது ஊஞ்சல் மற்றும் தேன் சிட்டு ஆகிய சிறார் இதழ்களின் படைப்புகள் வாயிலாக பங்களிப்பு செய்த, 25 மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் வில்லைகளை வழங்கினார்.
ஜெகதளா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.ஆர். பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொட்டக்கம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை மூன்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி பாராட்டினர்.
மேலும், பொதுமக்களிடமிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி வழங்கும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.