UPDATED : செப் 19, 2026 09:29 PM
ADDED : செப் 19, 2026 09:30 PM
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டையில் உள்ள, அரசு பள்ளி மாணவர்களிடம் குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி மாணவ, மாணவியர் மூலம் விழிப்புணர்வு பணிகளை கொண்டு செல்ல, டவுன் பஞ்., முடிவு செய்தது. நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி மற்றும் அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு குப்பையை தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த முகாமில், அன்றாடம் வீடுகளில் சேகரமாகும் காய்கறி கழிவு, உணவு கழிவு போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் பாட்டில், கவர்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய மக்காத உலர் கழிவுகளை தனியாகவும் பிரித்து வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவ, மாணவியருக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து டவுன் பஞ்., அதிகாரிகள் கூறுகையில், 'வீடுகளில் உற்பத்தியாகும் கழிவுகளை, துவக்க நிலையிலேயே பிரித்து கொடுப்பதன் மூலம், சுற்றுப்புற தூய்மை பாதுகாக்கப்படும். மாணவர்கள் இந்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்,' என்றனர்.
டவுன் பஞ்., செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பழகன், துப்புரவு ஆய்வாளர் காளியப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
