UPDATED : அக் 24, 2026 02:26 PM
ADDED : அக் 24, 2026 02:27 PM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட அலசநத்தம் வெங்கடேஷ் நகரில் உள்ள, சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி செய்யக் கூடிய கழிவு மற்றும் வீட்டு அபாய கழிவுகள் என, 4 வகைகளாக பிரித்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து, மாநகராட்சி அலுவலர்கள் விளக்கி கூறினர்.
மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில், மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்கள் மற்றும் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றில் நீர் தேங்காமல் அகற்ற வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமருத்துவம் மேற்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி, சிகிச்சை பெற வேண்டும் என, மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மாணவர்கள் குப்பையை தரம் பிரிப்பது குறித்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கை பற்றியும், சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாநகராட்சி அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
