பள்ளியில் கட்டாய கல்வி சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளியில் கட்டாய கல்வி சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : ஜூலை 22, 2026 07:46 PM
ADDED : ஜூலை 22, 2026 07:47 PM
உடுமலை:
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், கட்டாய கல்வி சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில், 775க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு, கலை, இலக்கியம் நாடகம், விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கிட ஆசிரியர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள், எதிர்பாராத சூழ்நிலையில் தங்களுடைய படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும் பொழுது, அதனை முறியடித்து மீண்டும் பள்ளி படிப்பு தொடர, ஒரு சிறு நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றம் செய்தனர்.
இந்த நாடகத்தை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், பல்வேறு வேடங்கள் அணிந்து இயல்பாக நடித்து தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு குழந்தைக்கும், இலவச கட்டாய சமமான மற்றும் தரமான ஆரம்பக் கல்வியை வழங்குவதே, கட்டாய கல்வி சட்டம்-2009ன் முதன்மையான குறிக்கோளாகும். அதனை கருத்தில் கொண்டு, இந்த நாடகம் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் நாகவேணி வரவேற்றார். தமிழாசிரியர் சிவராஜ், ஆங்கிலாசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.
இளஞ்சிறார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சையது முகம்மது குலாம் தஸ்தகீர் ஏற்பாடு செய்திருந்தார்.
