UPDATED : நவ 22, 2026 07:15 PM
ADDED : நவ 22, 2026 07:16 PM
காஞ்சிபுரம்:
வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவியருக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு, 'நமது உழுவியல்' தன்னார்வ அமைப்பு சார்பில், விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து, 'விவசாயம் நோக்கி இன்றைய தலைமுறை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், நெல் சாகுபடி செய்வது முதல், அறுவடை செய்து அரிசியாக மாற்றி உணவாக பயன்படுத்துவது வரை, விவசாயிகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயத்தின் முக்கியத்துவம், உணவு உற்பத்தியில் விவசாயிகளின் பங்கு மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து முன்னோடி இயற்கை விவசாயிகள், மாணவ மாணவியருக்கு விளக்கினர்.
தொடர்ந்து மாணவ மாணவியருக்கு மா, வெட்டிவேர், கொய்யா, சீதா, நெல்லி, மாதுளை, பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகளும், தக்காளி, வெண்டை, அவரை, கீரை வகை விதைகள் வழங்கப்பட்டன.
