கால்நடை சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து: மத்திய அரசு அனுமதி
கால்நடை சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து: மத்திய அரசு அனுமதி
UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 12:32 PM

கம்பம்:
கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் போது பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகளுடன் ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்த மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கால்நடைகளுக்கும் மனிதர்களை போல புதுப்புது வைரஸ், பாக்டீரியா தாக்குதல்களால் நோய்கள் உருவாகின்றன. கால்நடைகளுக்கு வழங்கப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளில் பயன் கிடைப்பது குறைந்து வருகிறது. மேலும் ஆண்டி பயாடிக் மருந்து மாத்திரைகள் உற்பத்தி செலவுகளும் அதிகரித்து வருகின்றன. அதிக பணமும் செலவழித்து தயாரிக்கப்படும் ஆண்டி பயாடிக் மாத்திரைகளால் பயனில்லை என்ற நிலை உள்ளது.
கடந்த வாரம் இந்திய கால்நடை பராமரிப்புத்துறை கால்நடைகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், வரும் காலங்களில் கால்நடைகளுக்கு வழங்கும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை தவிர்த்து, அதற்கு பதில் ஆயுர்வேத மருத்துகளை பயன்படுத்த வேண்டும். இதற்கான ஆய்வுகள் துவங்கி உள்ளன. விரைவில் இம்மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி கால்நடை டாக்டர்கள் கூறுகையில், ஏற்கனவே சித்த மருந்துகள் அதாவது கடுக்காய், திரிபலா உள்ளிட்ட 5 வகை சூரணங்கள் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. இது காய்ச்சல், உணவு உண்ணாதது, தண்ணீர் குடிக்காதது போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. நல்ல தீர்வும் கிடைத்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருந்துகளும், பயன்படுத்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது, என்றனர்.